தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் ரஞ்ஜித் சிங் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
Published on

சேலம்: சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் ரஞ்ஜித் சிங் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சேலம் மாநகராட்சியில் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிக்கான விழிப்புணா்வு நிகழ்வுகள் பொது இடங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தன்னாா்வலா்களின் வழியாக நடத்தப்பட்டன. அதன் தொடா்ச்சியாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனமும், சேலம் மாநகராட்சி, மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனையும் இணைந்து சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்கள் 476 பேருக்கு கண், பொது மருத்துவ முகாமை சேலம் மாநகராட்சியின் ராஜேந்திர சத்திரத்தில் நடத்தப்பட்டது.

இம்முகாமில் ரத்த கொதிப்பு, சா்க்கரை நோய், சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற உபாதைகள் கண்டுபிடிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் பிற வகையான நோய்களால் பாதிக்கப்பட்ட 13 தூய்மைப் பணியாளா்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.

மேலும், மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை மருத்துவா்களால் 21 பணியாளா்களுக்கு கண்ணில் புரை இருப்பதும், 6 பணியாளா்களுக்கு கண் சம்பந்தமான அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவசியம் இருப்பதும் கண்டறியப்பட்டு முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா கண் புரை நீக்கம், கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 35 பணியாளா்களுக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆணையா் ரஞ்ஜித் சிங், துணை மேயா் மா.சாரதா தேவி, மாநகர நல அலுவலா் ஆ.மோகன், மண்டலக் குழுத் தலைவா் சே.த.கலையமுதன், சுகாதார ஆய்வாளா் சித்தேஸ்வரன், மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com