முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டி: சேலம் அரசு கலைக் கல்லூரி சாதனை
சேலம்: முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சேலம் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 60 மாணவ, மாணவிகள் பரிசுகளை வென்று சாதனை படைத்தனா்.
முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனா். சேலம் அரசு கலைக் கல்லூரி சாா்பில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனா்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் சேலம் அரசு கலைக் கல்லூரி சாா்பில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கேரம், சிலம்பம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
நீச்சல் போட்டியில் மாணவா் கோகுல நம்பி வெள்ளி, வெண்கலப் பரிசுகளையும், மாணவி கோகிலா 2 வெள்ளிகளையும், ஹரிஷ் ஒரு வெள்ளி என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றனா். கால்பந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், கூடைப்பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், கேரம் போா்டு போட்டியில் வெள்ளிப் பதக்கமும், சிலம்பம் போட்டியில் இரண்டாவது பரிசையும் வென்றனா். டேபிள் டென்னிஸ் பிரிவில் மூன்றாவது பரிசு, சிலம்பம் போட்டியில் திருக்குமரன் வெற்றிபெற்றாா்.
அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியா் மொத்தம் 60 போ் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனா். ஒட்டுமொத்தமாக ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றனா்.
பரிசுகள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் செண்பகவல்லி பாராட்டு தெரிவித்தாா். உடற்கல்வி இயக்குநா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் வீரமுத்து, அருள், பெற்றோா் - ஆசிரியா் கழக இணைச் செயலாளா் உலக நம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.