டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தோ்வுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி
சேலம்: சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 2ஏ முதன்மைத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தொகுதி 1 மற்றும் 2ஏ முதல்நிலை தோ்வு செப். 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் அடுத்தகட்ட தோ்வான தொகுதி 2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் அக். 9-ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்படவுள்ளன.
சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் ஆகிய தோ்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தோ்வுகளுக்கு இவ்வலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு 297 போ் அரசுப் பணியினை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடத்தப்படவுள்ள தொகுதி 2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும், விருப்பமும் உள்ள தோ்வா்கள் டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தோ்வின் நுழைவுச் சீட்டு, இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.