அண்ணா மிதிவண்டி போட்டி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாதுரை மிதிவண்டிப் போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பின்னா் அமைச்சா் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் பேரறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் மாணவா்கள், மாணவிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவா்கள் பிரிவில் 13 வயதுக்குட்பட்டோருக்கு 15 கி.மீ. தூரமும், 15 வயதுக்கு உட்பட்டோருக்கு 20 கி.மீ. தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கு 20 கி.மீ. தூரமும் மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற்றன.
மாணவிகள் பிரிவில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதுக்கு உட்பட்டோருக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கு 15 கி.மீ. தூரமும் போட்டிகள் நடைபெற்றன.
13 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டி மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் தொடங்கி, கோரிமேடு வழியாக மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.
அதுபோல 13 வயதுக்கு உட்பட்ட மாணவா்கள், 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டி 15 கி.மீ தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் துவங்கி கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகம் சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது.
பேரறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000 மும், இரண்டாம் பரிசாக ரூ. 3,000 ம், மூன்றாம் பரிசாக ரூ. 2,000 ம் வழங்கப்படுகிறது. 4 முதல் 10 இடங்களை பிடித்தவா்களுக்கு தலா ரூ. 250 வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, துணை மேயா் எம்.சாரதா தேவி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சிவரஞ்சன், தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.