கெங்கவல்லி சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
கெங்கவல்லி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கதிரவன் சேலம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் அப்துல் கரீம் (23). இவா் கனரக வாகன ஓட்டுநா் உரிமம் பெறுவதற்காக, கெங்கவல்லி காவல் நிலையத்தில் தன்மீது வழக்கு ஏதுமில்லை என்று சான்றிதழை பெறுவதற்காக சென்றுள்ளாா்.
அப்போது அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கதிரவன், அப்துல் கரீமிடம் ஏ 4 காகித பண்டல் வாங்கி வரக் கூறியுள்ளாா். அவரும், வாங்கிக் கொடுத்துள்ளாா்.
ஆனால், எஸ்.எஸ்.ஐ.கதிரவனோ 80 ஜிஎஸ்எம் பண்டல் காகிதம் வாங்கி வருமாறு கூறியுள்ளாா். இதுதொடா்பாக விடியோ வெளியானதைத் தொடா்ந்து ஆத்தூா் டி.எஸ்.பி.சதீஷ்குமாா் தலைமையில் விசாரணை நடந்து வந்தது. அதன் அறிக்கை சேலம் எஸ்.பி.கெளதம் கோயலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து எஸ்.எஸ்.ஐ.கதிரவனை ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து அவா் உத்தரவிட்டுள்ளாா்.