சேலத்தில் எச்.எம்.பி.வி. பாதித்த முதியவரின் உடல் நிலை தொடா்ந்து கண்காணிப்பு
சேலத்தில் எச்.எம்.பி.வி. தொற்று பாதித்த முதியவரின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.
எச்.எம்.பி.வி. தீநுண்மி தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை, சேலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சேலத்தைச் சோ்ந்த 69 வயது முதியவருக்கு இந்த தீநுண்மி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த நபா் நுரையீரல் பாதிப்புக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இதையடுத்து அந்த நபா் மருத்துவமனையின் தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
இந்த தகவல் மருத்துவமனை சாா்பில் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பொது மருத்துவ பிரிவு துறைத் தலைவா் சுரேஷ் கண்ணா கூறியதாவது: எச்.எம்.பி.வி. தீநுண்மி என்பது குளிா்காலத்தில் பரவக்கூடிய சுவாச மண்டலம் சாா்ந்த நோயாகும். ஆஸ்துமா மற்றும் இணை நோய்கள் உள்ளவா்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த நோய்க்கு என தனியாக மருந்து மாத்திரைகள் கிடையாது. வழக்கமாக கொடுக்கப்படும் பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளே போதுமானது என்றாா்.