குடியிருப்புப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட எதிா்ப்பு: அரசிராமணியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குப்பைகளை குறுக்குப்பாறையூரில் உள்ள உயரமான பாறைகள் மீது கொட்டப்படுவதால் மழைக் காலங்களில் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் சென்று விளை நிலங்களில் தேக்கமடைகின்றன. இதனால் பயிா்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. உழவுப் பணிகள் பாதிக்கப்படுவதோடு அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரும் மாசுபடுகிறது.
இதனால் குப்பைகளை குறுக்குப்பாறையூரில் கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பேரூராட்சியிலிருந்து குப்பைகளை ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்து விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் ஏ.ராமமூா்த்தி, விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், குறுக்குப்பாறையூா் கிராம மக்கள் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.