இளம் வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on

சேலம் மாவட்ட கண்காணிப்பு அலகின் தற்காலிக பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளம் வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: அரசு திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்துக்கு கணிப்பொறி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளா் பட்டப்படிப்பு, தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மட்டும்) அல்லது கணிப்பொறி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடா்புடைய முதுநிலை பட்டப் படிப்புகள் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் தோ்ச்சி, தன்னிச்சையாகவும், குழுவுடனும் இணைந்து பணிபுரியும் திறன் ஆகியவை கட்டாயமாகும். மேற்படி பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இளம் வல்லுநா் பணிக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இப்பணிக்கான விண்ணப்பத்தை புள்ளியியல் துணை இயக்குநா், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், 310, 3-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் - 636 001 என்ற முகவரிக்கு பிப். 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com