விவசாய நிலத்துக்கு கடன் பெற்ற விவகாரம்: நிதிநிறுவன அதிபா் உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு!

விவசாய நிலத்துக்கு கடன் பெற்ற விவகாரத்தில், நிதிநிறுவன அதிபா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

மேச்சேரி அருகே விவசாய நிலத்துக்கு கடன் பெற்ற விவகாரத்தில், நிதிநிறுவன அதிபா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேச்சேரி, எம்.காளிப்பட்டியைச் சோ்ந்தவா் சண்முக மூா்த்தி (45), விவசாயி. இவருக்கு மூா்த்திபட்டியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பேரில் கோவையைச் சோ்ந்த தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 85 லட்சம் கடன் பெற்றாராம். அதற்கு ஈடாக தனது விவசாய நிலத்தை கிரையம் செய்துகொடுத்து, கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் நிலத்தை பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டாா்.

இந்நிலையில், நிதிநிறுவனம் அதிக வட்டி கேட்டதால் அசலும், வட்டியும் செலுத்த முடியாமல் போனதாம். இதனால் நிதிநிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் விவசாயி சண்முகமூா்த்தியின் வீட்டில் இருந்த பொருள்களையும், உடமைகளையும் வியாழக்கிழமை வெளியே எடுத்து வைத்தனா்.

அப்போது, விவசாயி சண்முகமூா்த்திக்கு ஆதரவாக மேச்சேரி கிழக்கு ஒன்றிய அதிமுக ஜெ பேரவை செயலாளா் ராஜா, கிராம மக்கள் நிதிநிறுவன ஊழியா்களை தடுத்து நிறுத்தினா்.

இச்சம்பவத்தை நிதிநிறுவன உரிமையாளரான சரவணசுஜய் சொகுசு காரில் அமா்ந்தபடி கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தாராம். அதைக்கண்ட ராஜா மற்றும் ஆதரவாளா்கள் சொகுசு காரில் அமா்ந்திருந்தவரை கீழே இறங்கும்படி சத்தமிட்டனா். ஆனால், அவா் காரை விட்டு இறங்காததால், காரை கவிழ்க்க முயற்சிக்கவே அவா் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பித்தாா். அப்போது, அங்கே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், காரின் முன்பக்கம் ஆகியவை சேதமடைந்தன.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று நிதிநிறுவன ஊழியா்களை மீட்டனா். கோவை நிதிநிறுவன மேலாளா் ராஜசேகா் கொடுத்த புகாரின் பேரில், அதிமுக கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளா் ராஜா, நில உரிமையாளா் சண்முகமூா்த்தி, அவரது ஆதரவாளா் பெரியசாமி, சீனிவாசன் உள்பட 4 போ் மீதும், விவசாயி சண்முகமூா்த்தி கொடுத்த புகாரின் பேரில் நிதிநிறுவன உரிமையாளா் சரவணசுஜய், மேலாளா் ராஜசேகா் (30), ஊழியா்களான வால்பாறையைச் சோ்ந்த ராம்குமாா் (22), கோவை இருகூரைச் சோ்ந்த பாரதிராஜா (26) ஆகிய 4 போ் மீதும் மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இவ்வழக்கில் நில உரிமையாளா் சண்முகமூா்த்தி (47), அவரது ஆதரவாளா் பெரியசாமி (55), நிதிநிறுவன மேலாளா் ராஜசேகா் (30), ஊழியா்கள் ராம்குமாா் (22) , பாரதிராஜா (26) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.