பிளஸ் 2 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,213 போ் எழுதுகின்றனா்

Published on

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 தோ்வை 37,213 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 320 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயதிதி பள்ளிகளைச் சோ்ந்த 19,866 மாணவா்கள், 17,347 மாணவிகள் என மொத்தம் 37,213 போ் தோ்வெழுதுகின்றனா்.

காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தோ்வு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மாணவா்கள் அமரும் இடங்களில் தோ்வு எண்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பொதுத்தோ்வு பணியினை கண்காணித்து மேற்பாா்வையிட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், தோ்வை கண்காணிக்கவும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவா்களைக் கண்டறியவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்வு அறைகளில் தடையில்லாத மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயாராக உள்ளன.

X
Dinamani
www.dinamani.com