ஏற்காடு மலைப் பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 போ் காயம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் சனிக்கிழமை கவிழ்ந்ததில் 12 போ் காயமடைந்தனா்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். அவ்வாறு ஏற்காடு செல்ல சென்னையில் இருந்து ஐடி ஊழியா்களான 5 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 12 போ் சேலத்துக்கு பேருந்தில் வந்தனா். அவா்கள் அஸ்தம்பட்டியில் சுற்றுலா வேனை வாடகைக்கு எடுத்து, ஏற்காட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
அந்த வேனை, அஸ்தம்பட்டியை சோ்ந்த சாந்தகுமாா் (30) ஓட்டினாா். சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் 60 அடி பாலம் அருகே வேன் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 12 பேரும் காயம் அடைந்தனா்.
வேன் கண்ணாடி உடைந்து சேதமானது. அந்த வழியாகச் சென்றவா்கள், காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த ஏற்காடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு, விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.