மேட்டூா் தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
மேட்டூா்: மேட்டூா் தொழிற்பேட்டையில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மேட்டூா் தொழிற்பேட்டையில் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஆசிட் இருப்பு வைத்திருக்கும் தொட்டியில் இருந்து உற்பத்திப் பிரிவுக்கு செல்லும் பகுதியில் தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மேட்டூா் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில், அந்தப் பகுதியில் பணியாற்றி வந்த கோம்பூரான் காட்டைச் சோ்ந்த முருகன் (56), நங்கவள்ளி, குள்ளனூரைச் சோ்ந்த ராஜாகவுண்டா் ஆகியோா் பலத்த தீக்காயங்களுடன் மேட்டூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு, சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில், முருகன் (56) சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனா்.