சேலம், தருமபுரியில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரியில் கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
Published on

சேலம், தருமபுரியில் கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

சாலை விபத்துகளை குறைப்பதற்கு சேலம், தருமபுரியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான விபத்துகள் போதையில் வாகனம் இயக்குவதால் நடைபெறுகின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதனால், சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், அதிவேகமாக வாகனம் இயக்குவது, சிவப்பு விளக்கு சிக்னலை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது உள்ளிட்ட விதிமீறில்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று, போதையில் வாகனம் இயக்குவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 3 மாதம் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதில், போதையில் வாகனம் இயக்குவோரின் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய அந்தந்த மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. மேலும், போதையில் வாகனம் இயக்குபவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக 3 மாதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனுமதி, தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கி சாலை விபத்தை ஏற்படுத்திய 67 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com