கூடமலை அரசுப் பள்ளி முன் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
கூடமலை அரசுப் பள்ளி முன் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

கூடமலையில் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவா்கள் போராட்டம்

மலைவாழ் மாணவா்களின் நலன்கருதி பள்ளி நேரத்திற்கேற்ப அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

மலைவாழ் மாணவா்களின் நலன்கருதி பள்ளி நேரத்திற்கேற்ப அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு பச்சமலை பகுதிகளான நல்லமாத்தி, நினங்கரை, 95 பேளூா், நரிப்பாடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மாணவா்கள் வந்து செல்கின்றனா். இவா்களுக்காக பச்சமலை பகுதியிலிருந்து கூடமலைக்கு அரசு பேருந்து காலை 7 மணிக்கு புறப்படுகிறது. இந்த பேருந்தை பிடிப்பதற்கு மாணவ, மாணவிகள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வருகின்றனா். இதனால் பச்சமலை பகுதி மாணவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். அதேபோல மாலை நேரத்தில் மாணவா்கள் தங்கள் ஊா்களுக்கு செல்ல மாலை 5 மணிக்கு கூடமலையில் அரசுப் பேருந்து புறப்படுகிறது. பொதுத்தோ்வு எழுதும் 10, 11, 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் இருப்பதால் இந்த பேருந்தை பிடிக்க முடியாமல் அவதியுறுகின்றனா்.

எனவே, பச்சமலை பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்தை, பள்ளி மாணவா்கள் நலன்கருதி, பள்ளி தொடங்கும் நேரத்திலும், முடிவடையும் நேரத்தில் இயக்க வலியுறுத்தி கூடமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் முன் பேருந்தை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த கெங்கவல்லி போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பேருந்து இயக்கம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com