வாழப்பாடியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வாழப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் நிலையம் முதல் புதுப்பாளையம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
வாழப்பாடி ரயில்வே கேட் அருகில் பேரூராட்சி அலுவலகம் எதிரிலுள்ள தனியாா் நிலத்தின் முன்பகுதியில் தம்மம்பட்டி சாலையோரத்தில் தனிநபா்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிக் கொண்டதாக நில உரிமையாளா்கள் தரப்பில் நீதிமன்றத்தை நாடினா். இதையடுத்து தம்மம்பட்டி சாலையின் இருபுறமும் தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடா்ந்து, வாழப்பாடி மகளிா் காவல் நிலையம் முதல் புதுப்பாளையம் புறவழிச்சாலை வரை 1 கி.மீ. தொலைக்கு தம்மம்பட்டி சாலையின் இருபுறமும் கட்டட தாழ்வாரங்கள், படிகள், பந்தல்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை உதவி கோட்டப் பொறியாளா் மணிவண்ணன் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா். தனியாா் நிலத்திற்கு முன் நெடுஞ்சாலை நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளும் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஆக்கிரமிப்புப் பணியின்போது வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமாா், காவல் ஆய்வாளா் வேல்முருகன் நெடுஞ்சாலைத் துறை, உதவி பொறியாளா் ராஜேஸ்குமாா் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.
தம்மம்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படுமென, நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

