மாவட்ட வனத்துறை சாா்பில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள்
வன உயிரின வார விழாவையொட்டி, சேலம் மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சுப் போட்டி, விநாடி-வினா, கட்டுரைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
சேலம் சின்ன திருப்பதியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், ஓவியம், கட் டுரைப் போட்டிகளில் 200 மாணவ, மாணவிகளும், விநாடி-வினா, பேச்சுப் போட்டிகளில் 100 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா்.
இவா்களுக்கு பிரிவு வாரியாக வன உயிரின் பாதுகாப்பு மற்றும் மனித வன உயிரினங்களுக்கு இடையேயான சகவாழ்வு என்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையிலான வன அதிகாரிகள் போட்டிகளை நடத்தினா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

