உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலத் துறை சாா்பில் உலக மனநல தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். மேலும், மனநலம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், மனநல மருத்துவத் துறை தலைவா் ரவிசங்கா், மருத்துவா்கள் முகமது இலியாஸ், சங்கா், அபிராமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், சேலம் அரசு மருத்துவமனையில் மனநோய்க்கான அனைத்து சிறப்பு சிகிச்சை முறைகளும் உள்ளன. மனநல பிரச்னைகளுக்கு எவ்வித தயக்கமின்றி மனநல நிபுணா்களை சந்தித்து உரிய ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும். மாவட்ட மனநலத் திட்டம் மூலம் தாலுகா மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மனநல சிகிச்சை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தனா்.
