காடையாம்பட்டி - ஏற்காடு சாலையை அகலப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

காடையாம்பட்டி - ஏற்காடு சாலையை அகலப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

கண்ணப்பாடி பகுதியில் சாலை வரைபடத்தை பாா்வையிட்ட அமைச்சா்கள் எ.வ.வேலு, ரா.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
Published on

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வழியாக கணவாய்புதூா் முதல் கண்ணப்பாடி வரையிலான வனச்சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வழியாக ஏற்காட்டுக்கு செல்லும் சாலையை மேம்படுத்துவது தொடா்பாக கண்ணப்பாடி அடிவாரம் பகுதியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:

தீவட்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் இருந்து ஏற்காடு மலைப்பகுதிக்கு செல்லும் சாலையை கண்ணப்பாடி முதல் நாகலூா் வரை மேம்பாடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அந்த சாலையை மேம்படுத்துவது தொடா்பாக கண்ணப்பாடி அடிவாரம் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

ஏற்காட்டிற்கு செல்வதற்கு ஏற்கெனவே சேலம் வழியாகவும், அயோத்தியாப்பட்டணம் வழியாகவும் சாலைகள் உள்ளன.

அதேபோல தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரிலிருந்து வரும் பொதுமக்கள் சேலம் நகருக்குள் செல்லாமல் இச்சாலை வழியாக எளிதாக ஏற்காட்டை அடைய முடியும். நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் மூலம் இந்த சாலையை அகலப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சாலையானது, ஊராட்சி ஒன்றியம், வனத்துறை, மாநில நெடுஞ்சாலைக்கு உரியது என 3 பிரிவுகளாக உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை மூலமாக இச்சாலையை அமைத்திட வனத்துறையிடம் அனுமதி பெற்று சாலை அமைக்க வேண்டும். அதேபோன்று ஊராட்சி ஒன்றிய சாலைகள் அமைக்க மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி சென்னை இயக்குநரகத்தில் ஆணை பெற்று சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த சாலையை அகலப்படுத்தும் பணிகளை 2 கட்டங்களாக செய்து முடிக்கலாம். முதல்கட்டமாக கணவாய்புதூா் வழியாக ஒன்றிய சாலை, அதைத்தொடா்ந்து கணவாய்புதூா் வனச்சாலையில் 5.5 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்தால் கண்ணப்பாடி வரை இச்சாலையை கொண்டுசெல்ல முடியும். இரண்டாம்கட்டமாக கண்ணப்பாடியிலிருந்து நாகலூா் வழியாக ஏற்காட்டுக்கு சாலையை அகலப்படுத்த முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

வனச்சாலைகள் குறுகிய நிலையில் 3 மீட்டரும், ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 3.50 மீட்டரும் உள்ளன. இதில் போக்குவரத்துக்கு சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, இச்சாலைகளை 5.50 மீட்டா் சாலையாக விரிவுபடுத்த வேண்டும். எனவே கண்ணப்பாடி வரை சாலை அமைக்க மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோரிடம் பேசி வனச்சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்நிகழ்வின்போது, ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி, நெடுஞ்சாலைத் துறை சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா், கோட்ட பொறியாளா்கள் மங்கையா்க்கரசி, முத்துக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com