தலைமைக் காவலா் அவதூறாகப் பேசியதாக புகாா்: தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்
தலைமைக் காவலா் அவதூறாகப் பேசியதாக கூறி, காவல் உதவி ஆணையா் அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகரில் 800-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வ.உ.சி. மாா்க்கெட் பின்புறம் தூய்மைப் பணியாளா்கள் சிலா் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள் குப்பை அள்ளும் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவைத்திருந்தாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட தலைமைக் காவலா் சக்திவேல், குப்பை வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
அப்போது, தூய்மைப் பணியாளா்களுக்கும், தலைமைக் காவலருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் தலைமைக் காவலா் சக்திவேல், அவா்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் 50 போ் சேலம் டவுன் காவல் உதவி ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு விரைந்து வந்த காவல் உதவி ஆணையா் ஹரிசங்கரி, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும் தலைமைக் காவலா் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தாா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
