லஞ்ச புகாரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் உள்பட 4 போ் கைது

Published on

ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் பெற்ற புகாரில், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் உள்பட 4 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (எ) பாலு. இவா் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து ஜாமீனில் வந்த அவா், தொடா்ந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட முயன்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக வழக்குப் பதிவுசெய்யாமல் இருப்பதற்காக, காவல் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என தலைமைக் காவலா் ராஜலட்சுமி, சக்திவேலிடம் கேட்டாராம். ஆனால், இதற்கு உடன்பட மறுத்த சக்திவேல், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, கொண்டலாம்பட்டி பகுதியில் லஞ்சம் தருவதாகக் கூறி, தலைமைக் காவலா் ராஜலட்சுமியை சக்திவேல் அழைத்துள்ளாா். அப்போது, ரசாயனம் தடவிய ரூ. 15,000 -த்தை சக்திவேல் அளித்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், ராஜலட்சுமியை பிடித்தனா். இந்தப் புகாரில் தொடா்புடைய ஆய்வாளா் ராமராஜன் (50), உதவி ஆய்வாளா்கள் ராமகிருஷ்ணன் (38), சரவணகுமரன் (38), தலைமைக் காவலா் ராஜலட்சுமி ஆகிய 4 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com