தீபாவளி: சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - இன்று முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி திருவனந்தபுரம், மங்களூரு, போத்தனூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி திருவனந்தபுரம், மங்களூரு, போத்தனூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் திருவனந்தபுரம், மங்களூரு, போத்தனூரில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் வரும் 19 தேதி இயக்கப்படுகிறது.

இந்த ரயில் போத்தனூரில் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து 22 ஆம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இரவு 10 மணிக்கு போத்தனூரை அடையும்.

இதேபோல, சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே வரும் 20 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அன்று நண்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு மங்களூா் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், மங்களூரு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் 21 ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் மங்களூரிலிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, திருப்பூா், சேலம் வழியாக மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

இதேபோல, திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூா் இடையே 21 ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், சேலம் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து 22 ஆம் தேதி பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் ரயில், சேலம், திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, எா்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 12) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com