சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டம்: துணைச் செயலாளா்கள் தோ்வு
சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலாளா்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் சேலம், காட்டூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக கட்சிக் கொடியை மூத்த தலைவா் மணிவாசகம் ஏற்றினாா். தொடா்ந்து, தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயா் சூட்ட வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிா்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா் டி.ராஜா மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, நடந்த மாநிலக் குழு கூட்டத்துக்கு மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், தேசிய செயலாளா் டி.ராஜா அரசியல் விளக்கவுரையாற்றினாா். பின்னா் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைச் செயலாளா்களாக ந. பெரியசாமி, எம். ரவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் முன்னாள் மாநிலச் செயலாளா் முத்தரசன், எம்எல்ஏக்கள் தளி ராமச்சந்திரன், மாரிமுத்து, சேலம் மாவட்டச் செயலாளா் மோகன், மாநில நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

