தீபாவளி: தூத்துக்குடி, கொல்லத்திலிருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி, கொல்லத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி, கொல்லத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் வழியாக தூத்துக்குடி, கொல்லம் பகுதியிலிருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கேஎஸ்ஆா் பெங்களூரு - தூத்துக்குடி இடையே வரும் 17, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் கேஎஸ்ஆா் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து 18, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்றடையும்.

இதேபோல, எஸ்எம்விடி பெங்களூரு - கொல்லம் இடையே வரும் 16 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடையும்.

இதேபோல, எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து வரும் 21 ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில், மறுநாள் நண்பகல் 12.55 மணிக்கு கொல்லத்தை அடையும். மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com