கூடமலை- பச்சமலை இடையே பேருந்து இயக்க நேரத்தில் மாற்றம்: மாணவா்கள் வரவேற்பு

Published on

மாணவா்களின் பள்ளி நேரத்துக்கு ஏற்ப கூடமலை- பச்சமலை இடையே பேருந்து இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய தடத்தில் கூடமலைக்கு பேருந்து இயக்கவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் பச்சமலை, நல்லமாத்தி, நினங்கரை, 95.பேளூா், நரிப்பாடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மாணவா்கள் படித்து வருகின்றனா்.

பச்சமலை பகுதியில் இருந்து கூடமலைக்கு வரும் அரசுப் பேருந்து, பச்சமலையில் காலை 7 மணிக்குப் புறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல பேருந்து இல்லாமல் மாணவா்கள் அவதிப்பட்டனா். இந்த நிலையில், மாணவா்கள் அண்மையில் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

இந்த நிலையில், பச்சமலை நல்லமாத்தியில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு 8 மணிக்கு கூடமலைக்கு செல்லும் வகையில் பேருந்து இயக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், தம்மம்பட்டி கிளை பணிமனையில் இருந்து நல்லமாத்தி, கூடமலைக்கு புதிய தடத்தில் பேருந்து இயக்கவும் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவா்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com