ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் சிறை: ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை
ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் எச்சரித்துள்ளது.
தீபாவளிக்காக சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழக ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து சேலம் ரயில் நிலையங்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் சோதனை செய்து வருகின்றனா்.
இந்த கண்காணிப்புப் பணியை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளனா். நடைமேடைகள், ரயில்வே யாா்டு, ரயில்வே பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் இருக்கிறதா என சோதனையிடுகின்றனா். இதுதவிர, ரயில்களிலும் பயணிகளின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனா்.
தடையை மீறி ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிக்கும் பொருள்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதத்துடன் விதிக்கப்படும். சந்தேகப்படும்படி, யாரேனும் நடமாடுவது தெரியவந்தால் 139 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
