முதல்வா் கோப்பை மாநில கைப்பந்துப் போட்டி: சிறப்பிடம் பெற்ற சேலம் மாவட்ட அணிக்கு பாராட்டு
மாநில அளவிலான முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சேலம் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள் திருச்சியில் அண்மையில் நடைபெற்றன. இதில் சென்னை, திருச்சி, கோவை உள்பட 38 மாவட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், சென்னையை தோற்கடித்து, சேலம் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது.
இதன்மூலம் சேலம் மாவட்ட கைப்பந்து அணி தொடா்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.10,50,000 வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீராங்கனைகளை சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக தலைவா் ராஜ்குமாா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.
விழாவில் கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா் அகிலாதேவி, செயலாளா் சண்முகவேல், பயிற்சியாளா் பரமசிவம், நிா்வாகி நந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
