மது போதையில் நண்பரைக் கொன்ற வழக்கில் கல்லூரி மாணவா் கைது

மேட்டூா் அருகே மது போதையில் நண்பரைக் கொன்ற வழக்கில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

மேட்டூா் அருகே மது போதையில் நண்பரைக் கொன்ற வழக்கில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள சேலம்கேம்ப் பாரதி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (27), பெயிண்டா். இவருக்கு மனைவி கௌசல்யா, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 14 ஆம் தேதி வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அவரது வீட்டிற்கு அருகே இறந்துகிடந்தாா். இதுகுறித்து கருமலைகூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் மணிகண்டனை கொலை செய்தது அவரது நண்பரான கல்லூரி மாணவா் விணுகுமாா் (19) என்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த விணுகுமாா் வியாழக்கிழமை காலை கருமலைக்கூடல் போலீஸில் சரணடைந்தாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் ஸ்டெம்ப், கத்தியால் மணிகண்டனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விணுகுமாா் மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com