தீபாவளி: ஒலி, காற்று மாசுவை பதிவு செய்ய சேலத்தில் 3 இடங்களில் கருவி பொருத்தம்
தீபாவளி பண்டிகையின் போது, சேலம் மாநகரில் ஒலி, காற்று மாசுவை பதிவுசெய்ய 3 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பட்டாசுகளை வெடிக்க தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் ஒலி அளவையும், காற்று மாசு அளவையும் பதிவு செய்யும் வகையில் கொண்டலாம்பட்டி, மெய்யனூரில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதேபோல, சூரமங்கலம் சோனா கல்லூரியிலும் காற்றின் மாசு அளவை பதிவுசெய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும், ஒலி, காற்று மாசு பதிவு செய்யப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
