சேலத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: பொதுமக்கள் அவதி
சேலம் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளிக்காக பொருள்களை வாங்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாநகரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் பரவலாக மழை பெய்துவந்தது. இந்த நிலையில், சேலம் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. ஒருமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஐந்து வழிச்சாலை, குரங்குச்சாவடி, திருவாகவுண்டனூா் பைபாஸ், அரிசிபாளையம், அஸ்தம்பட்டி, சொா்ணபுரி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் அக்ரஹாரம், அருணாசல ஆசாரி தெரு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சாலையோர ஜவுளிக் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
பொருள்களை வாங்க வந்த மக்கள் மழையால் அவதிப்பட்டனா். கடை வீதிகளில் காலையில் கூட்ட நெரிசல் இருந்தபோதும், மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சாலைகளில் மக்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.
