கூடுதல் கட்டணம் வசூலித்த 78 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் சரகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 78 ஆம்னி பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.1.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் சரகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 78 ஆம்னி பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.1.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்ட ணம் வசூலித்தால் பேருந்து உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கடந்த 16 ஆம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்டனா். அதன்படி, சேலம் சரகத்துக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி, தொப்பூா் ஆகிய சுங்கச் சாவடிகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.

463 ஆம்னி பேருந்துகளில் நடத்தப்பட்ட சோதனையில் அதிக கட்டணம் வசூலித்த 78 பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.1.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கூறுகையில், ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி முதல் 4 நாள்களாக நடைபெற்ற சோதனையில், அதிக கட்டணம் வசூலித்த 78 பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அபராதமாக ரூ.1.35 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேலும் சாலை வரியாக ரூ. 6.30 லட்சமும் வசூலானது.

வரும் 23 ஆம் தேதி வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் குழு ஆய்வு பணியை மேற்கொள்வா். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com