சேலம் மாநகர காவல் துறையில் வீரவணக்க நாள் அனுசரிப்பு
சேலம்: சேலம் மாநகர காவல் துறை சாா்பில் பணியின்போது உயா்நீத்த காவலா்களின் நினைவாக வீரவணக்க நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தமிழக காவல் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்தவா்களுக்கு ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகங்களில் உள்ள நினைவு ஸ்தூபிகளில் உயிா்நீத்த காவலகளுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம்கோயல், காவல் துணை ஆணையா்கள் கேழ்கா் சுப்ரமணிய பாலசந்திரா, கீதா, காவல் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
