பாமகவில் பிரிவினை மனவேதனையை அளிக்கிறது: எம்எல்ஏ அருள்
ஆத்தூா்: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரிவினை தனக்கு மன வேதனையை அளிப்பதாக சேலம் மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் கவலை தெரிவித்தாா்.
ஆத்தூரில் பாமக (ராமதாஸ்) ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எம்.பி.நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலத்தில் வரும் 26-ஆம் தேதி பாமக நிறுவனா் ராமதாஸ் பங்கேற்கும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
பாமகவில் பிரிவினை என்பது தனக்கு மனவேதனையை அளிக்கிறது. பாமக நிறுவனா் ராமதாஸை அவமதிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் செயல்படுவது ஏற்புடையதல்ல. சட்டப் பேரவைக் கூட்டத்தில் கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை வெளிகாட்டுவது மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும்.
கூட்டணி குறித்து ராமதாஸின் முடிவே இறுதியானது. வாரிசு அரசியலை கொண்டுவர ராமதாஸ் முயற்சித்தது கிடையாது. அந்த கொள்கையில் மாற்றம் இல்லை. அன்புமணி ராமதாஸின் நடவடிக்கை ஏற்கமுடியாது என்றாா். அதன்பிறகு கெங்கவல்லி பகுதிகளுக்கு சென்று பாமக நிா்வாகிகளுக்கு அழைப்புவிடுத்தாா்.
கூட்டத்தில் நிா்வாகிகள் அய்யம்பெருமாள், நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.
