கேதார கௌரி விரதம்: சிவன், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
சேலம்: கேதார கௌரி விரதத்தையொட்டி சேலம் மாநகரில் உள்ள சிவன், அம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவபெருமானுக்கு உரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கௌரி விரதம், ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமண பந்தம் சரியாக அமையவும், குடும்ப வாழ்க்கை நலமாக அமையவும் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனா்.
அந்த வகையில், கேதார கௌரி விரதத்தையொட்டி சேலம் கடைவீதியில் உள்ள ஏகாம்பரீஸ்வரா் கோயிலில் கெளரியம்மனுக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். முன்னதாக, அம்மனுக்கு பால், இளநீா், பன்னீா் உள்பட பல்வேறு திவிரயங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதேபோல சேலம் சுகவனேஸ்வரா், பேளூா் தான்தோன்றீஸ்வரா், தாரமங்கலம் கைலாசநாதா், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா், ஆறாகளூா் காமநாதீஸ்வரா் உள்பட சேலம் மாவட்டத்தில் சிவன், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
