சேலம் மாவட்டத்தில் சாரல் மழை: பொதுமக்கள் அவதி
சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இடைவிடாது பெய்த சாரல் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், கிணறு உள்ளிட்ட நீா்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.
இந்த நிலையில், மாநகரில் உள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, தாதகாப்பட்டி, ஐந்து ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே இடைவிடாத சாரல் மழையும், அவ்வவ்போது பலத்த மழையும் பெய்தது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. எனினும், இடைவிடாத சாரல் மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.
வாழப்பாடி, ஆனைமடுவு, ஆத்தூா், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூா், சங்ககிரி, ஓமலூா், டேனிஷ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
