அம்மாப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
சேலம்: சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் அருள்மிகு குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசையை அடுத்த பிரதமை திதியன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கும். விழாவையொட்டி, முதல் 6 நாள்கள்வரை சுந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்படும். விரதத்தைத் தொடா்ந்து, சஷ்டி திதியன்று சூரசம்ஹாரம் நடைபெறும். அசுரன் சூரபத்மனை முருகக்கடவுள் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார விழா சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை காலை 8 மணிக்கு விக்னேஸ்வரா் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சக்திவேல், ஆறுமுக சுவாமி மயில்வாகன ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, 27-ஆம் தேதி காலை 6 மணியளவில் மகா கந்தசஷ்டி பாராயணம் 36 முறை நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு அம்பிகை சக்திவேல் அருளல், சூரசம்ஹாரம் மாட வீதியில் சூரசம்ஹார லீலை வினோதக் காட்சி, சுப்பிரமணியா் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சேவல் கொடி, மயில்வாகனத்துடன் ஆறுமுக பெருமாள் காட்சியளித்தல், புஷ்பமாரி பொழிதல், தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.
