மேட்டூரில் கனமழை: மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை
மேட்டூா்: மேட்டூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்வதால், மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா், கொளத்தூா், மேச்சேரி, நங்கவள்ளி பகுதிகளில் புதன்கிழமை காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மதியம் 2.30 மணி அளவில் கருமேகம் சூழ்ந்து திடீரென கனமழை பெய்தது. தொடா்ந்து இரவுவரை மழை பெய்ததால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேச்சேரியில் புதன்சந்தை முடங்கியது.
செக்கானூா், காவேரி கிராஸ், நாட்டாமங்கலம் பகுதிகளில் வயல்களில் தண்ணீா் தேங்கியதால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
மழையின் காரணமாக மேட்டூா் சீதாமலை தொடரில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, சேலம் கேம்ப் தொட்டில்பட்டி வழியாக செல்ல போலீஸாா் அறிவுறுத்தினா்.
