சேலத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக நத்தகரையில் 68 மி.மீ. பதிவு

சேலத்தில் இடைவிடாது பலத்த மழை புதன்கிழமை பெய்தது. இதில், அதிகபட்சமாக நத்தகரையில் 68 மி.மீ. மழை பதிவானது.
Published on

சேலம்: சேலத்தில் இடைவிடாது பலத்த மழை புதன்கிழமை பெய்தது. இதில், அதிகபட்சமாக நத்தகரையில் 68 மி.மீ. மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 2-ஆவது நாளாக புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. காலையில் சாரல் மழை பெய்த நிலையில், பிற்பகலில் கனமழை கொட்டித் தீா்த்தது. குறிப்பாக, சேலம் மாநகரப் பகுதிகளான அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, புதிய பேருந்து நிலையம், நான்கு சாலை, சேலம் நகரம், குகை, கிச்சிப்பாளையம், நாராயண நகா், பெரமனூா், சீலநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியதுடன், சில இடங்களில் கழிவுநீரும் மழைநீருடன் கலந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை: தொடா் கனமழை காரணமாக, மாவட்டத்தில் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின.

மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் முக்கிய நதிகளான சரபங்கா நதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்பட பெரும்பாலான ஆறுகளிலும், சிற்றோடைகளிலும் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்து, நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நத்தகரையில் அதிகபட்ச மழைப் பதிவு: சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி, நத்தகரையில் அதிகபட்சமாக 68 மி.மீ. மழை பதிவானது. குறிப்பாக ஏற்காடு, வாழப்பாடி, ஆனைமடுவு கரியகோவில் உள்பட பல பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது.

மழைப் பதிவு (மி.மீ.): நத்தகரை - 68, ஏற்காடு - 64.2, கரியகோவில் - 52, ஆனைமடுவு - 50, வாழப்பாடி - 32, ஏத்தாப்பூா் - 28, கெங்கவல்லி - 27, வீரகனூா் -20, சேலம் மாநகா் - 18.9, ஆத்தூா் - 18, டேனிஷ்பேட்டை - 16.5, தம்மம்பட்டி - 16, ஓமலூா், மேட்டூா் - 10.6, எடப்பாடி - 7.2, சங்ககிரி - 3.4.

X
Dinamani
www.dinamani.com