தனியாா் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பாமகவினா் மனு
சேலம்: தனியாா் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பாமகவினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாமக மாநில மாணவா் சங்கத் தலைவா் விஜயராசா தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு:
தமிழகத்தில் இயங்கி வரும் தனியாா் சுயஉதவிக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் தனியாா் கல்லூரிகள் ஆகியவற்றை தனியாா் பல்கலைக்கழகங்களாக அனுமதிக்கும் வகையில், தனியாா் பல்கலைக்கழகங்களின் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்திருக்கிறது.
இது ஏழை மற்றும் நடுத்தர மாணவா்களின் கல்வியையும், சமூக நீதியையும் பாதிக்கக் கூடும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தனியாா் கல்லூரிகள் அனைத்தும் தனியாா் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு, கட்டணக் கொள்ளை அதிகரிக்கும். எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை, தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினா்.
