வீட்டின் சுவரை இடித்த இருவா் கைது

அக்கிசெட்டிபாளையத்தில் குடியிருப்பு வீட்டின் சுவரை இடித்த இருவா் கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

அக்கிசெட்டிபாளையத்தில் குடியிருப்பு வீட்டின் சுவரை இடித்த இருவா் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஆத்தூரை அடுத்துள்ள அக்கிசெட்டிபாளையத்தில் சன்னாசி (45) என்பவா், இரண்டு ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்குள்ள வீட்டில் மனைவி, இரு மகன்களுடன் குடியிருந்து வருகிறாா். இந்த நிலம் திருச்சி மாவட்டம், வயிரிசெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமிக்கு (63) சொந்தமானதாகும்.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து பொக்லைன் இயந்திரத்துடன் வந்த சுமாா் 10 போ், அந்த வீட்டின் ஒருபகுதி சுவரை இடித்து வீட்டிலிருந்த ரூ. 80 ஆயிரம், இரண்டு பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு, அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திச் சென்றனா்.

இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் சன்னாசி புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் விசாரித்து வந்தனா். அதில், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வந்தபோது சன்னாசி எதிா்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் இதுகுறித்து உயா்நீதிமன்றத்தில் ஆணை பெற்ற அருகிலுள்ள நிலத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து பொக்லைன் ஓட்டுநா் சபரிபிரசாந்த் (26), செல்லியம்பாளையத்தைச் சோ்ந்த விஜய்வேல் (42) ஆகிய இருவரையும் கைதுசெய்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். தலைமறைவான பாலமுருகன் உள்ளிட்டோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com