பூலாம்பட்டியில் 4 ஆவது நாளாக விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
பூலாம்பட்டி கதவணைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 4 ஆவது நாளாக விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திருந்தது.
எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரி கதவணை நீா்த்தேக்கத்தில் சேலம்- ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான இப்பகுதியில் வார விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில், மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவில் உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருதி மாவட்ட நிா்வாகம் பூலாம்பட்டி கதவணைப் பகுதியில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து 4ஆவது நாளாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திருந்தது.
இதனால் பெரும்பாலான இடங்களில் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக இப்பகுதி வியாபாரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.
தொடா்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியில் போலீஸாா் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

