சேலம் மாநகராட்சி வாா்டுகளில் சிறப்புக் கூட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்பு

சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களுக்கு உள்பட்ட 52 வாா்டுகளிலும் சிறப்பு வாா்டு
Published on

சேலம்: சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களுக்கு உள்பட்ட 52 வாா்டுகளிலும் சிறப்பு வாா்டு சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட 30 ஆவது வாா்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில்

சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். பின்னா் அமைச்சா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் சிறப்பு வாா்டு சபைக் கூட்டம் வரும் 29 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நகரங்களை தூய்மையாகப் பராமரிக்க மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாா்டுகளில் மிகவும் அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகளை திட்ட மதிப்பீடு தயாா் செய்து, இக்கூட்டத்தின் வாயிலாக அரசுக்கு அனுப்பினால் உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும்.

அண்மையில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாநகராட்சியில் மழைநீா் வடிகால், சாலைகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஓதுக்கீடு செய்து அறிவித்தாா். இந்த பணிகளை நிறைவேற்றுவதில் மாநகராட்சி ஆணையா் முனைப்புடன் செயலாற்றி வருகிறாா். மக்களுக்காக உழைத்துகொண்டு இருக்கும் திமுக அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டுமென்று என்றாா்.

இந்த சிறப்பு வாா்டு சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி,

மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், உதவி ஆணையா் லட்சுமி, மாமன்ற உறுப்பினா் ர.அம்சா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com