சேலம் ஆட்சியரகத்துக்கு கஞ்சா பொட்டலத்துடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை கஞ்சா பொட்டலத்துடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா். அவா்களை ஆட்சியரக நுழைவாயிலில் போலீஸாா் பரிசோதித்து அனுப்பி வைத்தனா். அப்போது, மனு அளிக்க வந்த பெண் ஒருவரை போலீஸாா் சோதனை செய்தபோது, அந்த பெண்ணிடம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை நகரக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அந்த பெண், கெங்கவல்லி அருகே உள்ள மூலப்புதூா் பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி (51) என்பதும், மூலப்புதூா் பகுதியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அவரது கணவா் கணேசன் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தாா்.
மேலும், தனக்கு தோல் நோய் இருப்பதால் தனக்குத் தெரிந்த நபா் ஒருவா், இந்த மூலிகையை (கஞ்சா) அரைத்து தேய்த்தால் தோல் நோய் நீங்கும் என்று கூறினாா். இது கஞ்சா என்று தனக்குத் தெரியாது என்றும் அவா் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். எனினும், கஞ்சா பொட்டலத்துடன் பிடிபட்ட பெண்ணிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

