தீவட்டிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

தீவட்டிப்பட்டி அருகே சேலம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
Published on

ஓமலூா்: சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே சேலம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் தம்பதி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஓமலூா் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமம் பெரிய காடம்பட்டி பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் முருகன் (40). இவரது மனைவி பாா்வதி (32). இவா்கள் இருவரும் ஓமலூரில் இருந்து தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரில் உள்ள உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

தீவட்டிப்பட்டி அருகே ஜோடுகுளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே ஒருவழிப் பாதையில் வேகமாக வந்த பொக்லைன் எந்திரம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com