ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 26: ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி செல்லும் அரசு நகர் பஸ்கள் மற்றும் எல்.எஸ்.எஸ். பஸ்கள் தைலாகுளம் மற்றும் நக்கமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி சாலையில் உள்ள தைலாகுளம், நக்கமங்கலம் பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை நேரங்களில் அரசு நகர் பஸ்கள் மற்றும் எல்.எஸ்.எஸ். பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முறையிட்டும் பயன் இல்லை. இதனையடுத்து, கட்டுமானத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் எஸ். மாரிச்சாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாநில குழு உறுப்பினர் எம். மகாலட்சுமி, டி.ஒய்.எஃப்.ஐ. மாவட்ட பொருளாளர் எஸ்.வி. சசிகுமார் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர்.
மாவட்டத் தலைவர் பி. மாரியப்பன் நன்றி கூறினார்.