கேணிக்கரை காவல்நிலையம் இடமாற்றம் செய்யப்படுமா?
By | Published On : 22nd March 2010 12:32 AM | Last Updated : 20th September 2012 01:35 PM | அ+அ அ- |

ராமநாதபுரம், மார்ச் 21: ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள கேணிக்கரை காவல்நிலையம் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள், வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராமநாதபுரம் நகரில் கேணிக்கரைப் பகுதி காவல்நிலையம் 1981-ல் துவங்கப்பட்டது. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இக்காவல் நிலையம், கடந்த 1.1.2006 முதல் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு
வாயில் முன்புறமாக காவல்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கிவருகிறது.
ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டணம் செல்லும் சாலையில் கேணிக்கரைப் பகுதியில் காவல்நிலையம் செயல்பட்டு வந்தபோது, அக் காவல் நிலையத்திற்கு கேணிக்கரை என்ற பெயர் இருந்தது பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது அக்காவல் நிலையம் பட்டணம்காத்தான் பகுதிக்கு மாறுதலாகி 4 ஆண்டுகள் ஆனப் பிறகும் கேணிக்கரை காவல்நிலையம் என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது.
நகைக் கடைகள், வங்கிகள், பேருந்து நிலையம் மற்றும் முக்கியப் பேருந்து நிறுத்தங்கள், முக்கியக் கோயில்கள், குடியிருப்புகள் ஆகிய அனைத்தும் கேணிக்கரை பகுதியில் தான் அதிகமாக உள்ளன.
இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக இருந்த காவல்நிலையம் பட்டணம்காத்தானுக்கு மாறிச் சென்றது பொதுமக்களுக்கு பயன்படாத நிலையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
நகரில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் பெரும்பாலானவை கேணிக்கரை பகுதியில் தான் நடந்துள்ளன. எனவே இக்காவல் நிலையத்தை பட்டணம்காத்தான் பகுதியிலிருந்து மீண்டும் கேணிக்கரை பகுதிக்கே மாற்றம் செய்ய வேண்டும் என்று வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:
பட்டணம்காத்தான் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய பகுதியாகவும் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் மற்றும் நீதிமன்ற அலுவலகங்களும் உள்ளன.
இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் கேணிக்கரை காவல்நிலையத்தைச் சேர்ந்தது.
வாணி விலக்கு சாலை, வழுதூர் விலக்கு சாலை உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் அடிக்கடி நடந்துவருவதால் கேணிக்கரை பகுதியிலிருந்து சம்பவ இடத்திற்கு
உடனடியாக வருவதற்கு நீண்ட நேரமாகிவிடும். எனவே போலீஸôரின் பாதுகாப்பு பணிக்கு இப்போது இருக்கும் இடமே வசதியானது.
ஒரு வருடத்திற்கு கேணிக்கரை காவல்நிலையத்தில் மட்டும் 700 குற்ற வழக்குகள்
பதிவு செய்யப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக கேணிக்கரை பகுதியில் காவல்நிலையம் இயங்கி வந்தபோது மாத வாடகையாக ரூ.8000 வரை கொடுத்து வந்தோம்.
காவல்நிலையத்தை காலி செய்யுமாறு கட்டட உரிமையாளர் நீதிமன்றத்திற்கு சென்றதால் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது வாடகை இல்லாமல் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருவதால் அரசு நிதி வீணாவதும் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.