தேனி, ஜன. 22:தேனி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தொடக்கக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்த கடன் நிதியை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூட்டுறவு பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனியில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகக் குழு மற்றும் கூட்டுறவு சங்கச் செயலர்களின் கூட்டு நடவடிக்கைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.முத்தையா தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்கள் செல்வராஜ், அய்யப்பன், இணைச் செயலாளர்கள் ராமையா, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தொடக்கக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயிர்க் கடன், நகைக் கடன், கூட்டுப் பொறுப்புக் குழு கடன், மகளிர் குழு கடன், தாட்கோ, டாப்செட்கோ திட்டக் கடன்கள் கடந்த ஒரு மாதமாக வழங்கப்படவில்லை. இந்த கடன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு ஆணை மற்றும் தொழிற்சங்க ஒப்பந்தத்தின்படி கடன் மனுக்களை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவதற்கு, தேனியில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி மண்டல அலவலகத்தில் தனிப் பிரிவு அமைக்க வேண்டும்.
மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தொடக்கக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடன் நிதியை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் தவணைகளை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடக்கக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு கடன் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மண்டல அலுவலகம் முன்பு, வரும் பிப்ரவரி 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.