பரமக்குடி, ஜூலை 3: பரமக்குடியில் தாலுகா ஓய்வூதியர்கள் சங்கத்தின் 34-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் தலைவர் சி.கே. ராமமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச் செயலர் எஸ். முருகேசன், பொருளாளர் டி.ஆர். ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் ஆர். சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஏ. காந்திமதிநாதன் வரவேற்றார்.
பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், மாநில ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் பா. சோமசுந்தரம், மாநில அமைப்பாளர் சு.க.முகிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு 2010-11-ம் ஆண்டின் ஆண்டறிக்கையினை சங்கத்தின் செயலர் எஸ். முருகேசன் வாசித்தார்.
ஓய்வூதியர் சங்கத்துக்கு கட்டடம் கட்டித் தரக் கோரியும், மூலிகைப் பூங்கா அமைத்துத் தரவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களின் மருத்துவப் படியை ரூ.100-லிருந்து, ரூ.500-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்கத்தின் நிர்வாகிகள் கே.பாலசுப்பிரமணியன், ப.கார்மேகம், எஸ்.ஏ.கிருஷ்ணன், எஸ். செல்லமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.