ராமநாதபுரம், ஜூலை 3: ராமநாதபுரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியமான இக் கோயிலில் ஆனித் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினைத்
தொடர்ந்து தினசரி சுவாமி காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனத்தில் திருவீதியுலா வருவார்.
விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இம்மாதம் 7 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஸ்ரீசீதா திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
முன்னதாக யானை வாகனத்தில் ஸ்ரீராமபிரான் மாப்பிள்ளை அழைப்பாக அழைத்து வரப்படுகிறார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமியும், அம்மனும் மணக்கோலத்தில் திருவீதியுலா வரவுள்ளனர். வருகிற 10 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் நிர்வாகச் செயலாளர் வி.மகேந்திரன், செயல் அலுவலர் மாதாடுபங்கன், ஸ்ரீராமபக்த சபையின் தலைவர் நாராயணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.