திருப்புவனம் பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

மானாமதுரை, ஜூலை 3: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க இப் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மணல் குவாரி அமைக
Published on
Updated on
1 min read

மானாமதுரை, ஜூலை 3: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க இப் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தால் இதைக் கண்டித்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்கள் நடத்த இவர்கள் முடிவு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

   திருப்புவனம் பகுதியில் தேளி, செல்லப்பனேந்தல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் வைகையாற்றுக்குள் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ததையடுத்து, இப் பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வந்தனர்.

  இந் நிலையில், திருப்புவனம் புதூர் முஸ்லீம் ஜமாத் திருமண மண்டபத்தில் இப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு திருப்புவனம் கண்மாய் பாசன சங்கத் தலைவர் பெரியணன் தலைமை வகித்தார். கிராமப் பொறுப்பாளர்கள் கனநாதன், ரெகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  செல்லப்பனேந்தல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பெரிசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆதிமூலம், முத்துராஜா, புதூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் இப்ராகீம்கனி உள்பட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   ஏற்கெனவே திருப்புவனம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது, பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது, வைகையாற்றுக்குள் கால்வாய்கள் மேடாகி தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந் நிலையில், திருப்புவனம் பேரூராட்சிப் பகுதியை ஒட்டியுள்ள வைகையாற்றுப் பகுதியில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இப் பகுதியில் குவாரி அமைக்க அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.  

   திருப்புவனம் பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை (ஜூலை 4) பொதுமக்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக் கொடுத்து வலியுறுத்த முடிவு செய்யப்படுகிறது.

  பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை திரட்டி திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம், தொடர் சாலை மறியல் என குவாரி அமைக்கும் முடிவு கைவிடப்படும் வரை தொடர்ந்து பல கட்டப் போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.