ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 3: விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.டி.ராஜேந்திரபாலாஜி எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதற்காக மாவட்டச் செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வந்தார்.
அவருக்கு ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தொகுதி செயலாளர் சிந்து முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.மங்களசாமி, நக்கமங்கலம் கிளைக் கழகச் செயலாளர் கே.காளிமுத்து ஆகியோர் தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.
பின்னர் காமராஜர் சிலை, பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகள், மேலரதவீதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை ஆகியவற்றிற்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது அவரிடம் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் முனியசாமி, ஒன்றியச் செயலாளர் சேதுப்பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் சி.எம்.ராஜ்குமார், வழக்கறிஞர்கள் க.சுரேஷ்நெப்போலியன், திலகராஜன், ரா.தா.ஆணழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் சந்தானமூர்த்தி, அ.மகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தொகுதி செயலாளர் சிந்து முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.